நாட்டு மக்களை ஏமாற்றும் மிக மோசமான வரவு செலவுத் திட்டத்தையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கூறுகையில்,
இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டையும், மக்களையும் மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது.
ஏற்கனவே நாடு பாரிய கடன் பொறிக்குள் அகப்பட்டு சர்வதேசத்திடம் தொடர்ந்து கையேந்தும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் மிகவும் மோசமான வரவு செலவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.
நாடு கடன் பொறியில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அபிவிருத்தி எப்படி சாத்தியமாகும்? இது நாட்டு மக்களை ஏமாற்றும் மிகவும் மோசமான வரவு செலவுத் திட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
இதனூடாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மீது மேலும் சுமைகளை அரசு ஏற்றியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கவே மாட்டோம். நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.