இலங்கையில் முதல் தடவையாக அதிவலு கொண்ட லேஷர் தொழில்நுட்பத்தின் ஊடாக சத்திர சிகிச்சையொன்று களுத்துறை மாவட்ட நாகோடா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீறுநீரகத்தில் கல்லொன்று உருவாகியிருந்த நிலையில், அந்த கல் அதிவலுக் கொண்ட லேஷர் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மருத்துவ வரலாற்றில் இவ்வாறான சத்திர சிகிச்சையொன்று முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
வைத்தியர் கலன பரண பல்லியகுருகே தலைமையிலான குழுவினர் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். 52 வயதான ஒருவருக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் சிறுநீரகத்தில் 4 சென்றிமீற்றர் நீளமான கல்லொன்று காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாரிய கல்லை, 140 வொட் மின் வலுவில் லேஷர் தொழில்நுட்பத்தின் ஊடாக, உடைத்து, சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த நபரின் சிறுநீரகத்திலிருந்த 8 அங்குல கல்லொன்று, சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது தடவையாக கல்லை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதை அடுத்து, புதிய தொழில்நுட்பம் இந்த சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டதாக வைத்திய குழாம் தெரிவிக்கின்றது,
இந்நிலையில், குறித்த நோயாளர், 4 நாட்கள் பூரண குணமடைந்து வழமைக்கு திரும்புவார் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.