இஸ்ரேல் விமானப்படையினர் சிரியா மீது நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர் என அங்கிருக்கும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிரியா, இஸ்ரேல் ஆகிய இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர் என ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
இதற்கிடையில், இஸ்ரேலின் கோலன் பகுதியில் ராணுவ நிலைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது இஸ்ரேல் ராணுவத்தை தாக்க திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடிகுண்டுகள் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எல்லையோரம் அமைந்துள்ள சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 3 சிரிய ராணுவ வீரர்கள், ஈரான் புரட்சிப்படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.