இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதரகங்கள் இணைந்து இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை மைய பிராந்திய வர்த்தக மையமாக மாறுவதற்கான முயற்சிகளை பாதிக்கும்.
அத்துடன் மூலப்பொருள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் இந்த நீண்டகால இறக்குமதி தடையானது, உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப அமையவில்லை என்பதை தாம் நினைவுப்படுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30-1 க்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் முடிவு கவலைக்குரியது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தமது உறுதிப்பாட்டை கொண்டிருக்கின்றன.
எனவே இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி என்ற சிறப்பு வரிச்சலுகை காரணமாக ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு ஒரு முக்கியமான பொருளாதார பங்காளியாக இருக்கிறது.
இந்தநிலையில் மனித உரிமைகள், தொழிலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான சர்வதேச மரபுகளை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன்மூலம் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் தொடர்பில் அனுகூலங்களை பெறமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.
பகிரப்பட்ட சர்வதேச கடமைகள் மற்றும் கடமைகளுக்கு ஏற்ப, இலங்கையுடனான ஆழ்ந்த ஈடுபாட்டை தாம் தொடர விரும்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.