கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகளிடையே வேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிகளுக்கு ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது.
தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரையில் 57,129,857 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,363,451 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ள நிலையில், இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிகளுக்கு ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் கிளூஜ் கருத்து வெளியிடுகையில்.
ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றின் மையம் ஆகியுள்ளன. கடந்த வாரம் ஐரோப்பிய மண்டலத்தில் 29 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஒவ்வொரு 17 வினாடிகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார். கடந்த வாரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது.
எனினும், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கைகளால் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிகுறிகள் காணப்படுகின்றன” என அவர் மேலும் கூறியுள்ளார்.