முஸ்லிம் அறநெறி (மதரசா) பாடசாலைகளுக்கும் நாட்டின் ஏனைய அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் போல் கல்வியை வழங்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம் அறநெறி பாடசாலைகள் குறித்த எமது நிலைப்பாடு என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேட்கின்றார். ஒவ்வொரு பாடசாலைகளை தரம் பிரித்து, அந்த தரத்திற்கு வரையறுக்கப்பட்ட கொள்கைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.
நாட்டில் அரச, தனியார், சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன இவை அனைத்தும் சம்பந்தமாக பொதுவான கொள்கையை கல்வி விடயத்தில் நாங்கள் பின்பற்றுகிறோம். எந்த விதமான பாடசாலையாக இருந்தாலும் அதற்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அன்றைய எதிர்க்கட்சிகள் முஸ்லிம் அறநெறி பாடசாலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததுடன் அவற்றை மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.