போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கு இடமில்லை என்று ஆளுங்கட்சியினர் வீரவசனம் பேசுவது, இது கடும்போக்குவாத இனவாத – எதேச்சதிகார அரசு என்பதை வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது.
பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலே தான் ஜனாதிபதியாக வந்தேன் என்ற இறுமாப்பு கோட்டாபய ராஜபக்சவின் மனதில் இருக்கும் வரைக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னெடுத்தே செல்லும். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.
இன, மத, மொழி ஒற்றுமைகளைச் சிதறடிக்கும் இந்த அரசின் ஆட்சிக்குப் பாடம் புகட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.