ஜப்பானில் தொழிலதிபர் ஒருவரின் 15 வயதான மகளை கடத்திக் கொண்டு வந்து தலைமறைவாகியுள்ள கொச்சிக்கடையை சேர்ந்த 24 வயதான இளைஞனை தேடி பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக கல்விக்காக ஜப்பானிற்கு சென்ற குறித்த இளைஞன், அங்குள்ள தொழிலதிபரின் 15 வயதான ஒரே மகளை இலங்கைக்கு அழைந்து வந்ததாக கூறப்படுகின்ற நிலையில் கடந்த 7 மாதங்களாக இந்த ஜோடி தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இதனையடுத்து சிறுமியின் தாய் 2020 மார்ச் 15 அன்று கொச்சிக்கடை பொலிசில் புகார் அளித்திருந்தார்.
குறித்த இளைஞன் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்காக ஜப்பான் சென்றபோது, ஜப்பானில் ஒரு மில்லியனர் தொழிலதிபரின் வீட்டில் பகுதிநேர வேலை பார்த்துள்ளார்.
இதன்போது, தொழிலதிபரின் 15 வயதுடைய ஒரே மகளோடு காதல் கொண்டிருந்த அவர், கடந்த மார்ச் 13ஆம் திகதி, பெற்றோருக்கு தெரியாமல் ஜப்பானிய காதலியுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாயார் ஜப்பானிய தூதரகம் மற்றும் பொலிசில் புகார் அளித்ததையடுத்து , சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, தூதரகத்தால் கொச்சிக்கடையில் உள்ள பலகத்துறை பகுதியில் சுற்றுலா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் ஜப்பானிய சிறுமியின் பாதுகாப்பிற்காக, காதலனின் சகோதரியும் ஹொட்டலில் தங்கியிருந்தார்.
ஜப்பானில் இருந்து தனது காதலியின் தாய் இலங்கைக்கு வருவதை அறிந்த சந்தேகநபர், தனது சகோதரியின் உதவியுடன் சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஜப்பானிய காதலியுடன் தலைமறைவானார்.
இதனையடுத்து 2020 மார்ச் 15 யப்பான் சிறுமியின் தாயார் இலங்கை வந்து பொலிசில் முறைப்பாடு செய்ததுடன் இது தொடர்பில் பொலிசார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதை தொடர்ந்து, சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபரின் தாய், சகோதரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொச்சிக்கடை பொலிசார் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு இ்த ஜோடியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
மேலும் குறித்த ஜோடி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591631 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கொச்சிக்கடை பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.