உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் 03 ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சொந்தமான இரு இலங்கை வங்கி கணக்கில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறித்த விடயம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தவகையில் நேற்று திங்கட்கிழமை சாட்சியம் வழங்கியுள்ள இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர் ஐ.சி.கே. கண்ணங்கரா, குறித்த வங்கி கிளையில் ஹிஸ்புல்லா 5 கணக்குகளை வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
அத்தோடு ஹிஸ்புல்லாவால் இயக்கப்படும் ஐந்து வங்கிக் கணக்குகளில் ஹிரா அறக்கட்டளை மற்றும் மட்டக்களப்பு வளாக தனியார் லிமிடெட் என்ற இரண்டு கணக்குகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் குறிப்பாக இலங்கை ஹிரா அறக்கட்டளை கணக்கு பதினைந்து சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு நிதிகளும் மட்டக்களப்பு வளாகம் தனியார் லிமிடெட் கணக்கிற்கு 2016 மற்றும் 2019 ற்கிடையிலான காலகட்டத்தில் ஏழு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது.
மத்திய வங்கியில் உள்ள நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெறும் கணக்கில் பரிவர்த்தனைகள் மத்திய வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், ஹிஸ்புல்லாவால் இயக்கப்படும் இவ்வளவு பெரிய தொகைகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களையோ அல்லது இந்த பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரியவை என்றோ இலங்கை வங்கி கண்டுபிடிக்கவில்லை என்றும் தலைமை அலுவலகம் தெரிவித்ததாக அவர் சாட்சியமளித்தார்.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்த பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரியவை என்று இலங்கை வங்கி, மத்திய வங்கிக்கு அறிக்கை அளித்திருந்தது அதன்படி மத்திய வங்கி நிதி மோசடி புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டினை வழங்கியது.
மேலும் முதல் கணக்கு, இலங்கை ஹிரா அறக்கட்டளை, 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18 அன்று சமூக சேவை கணக்காக திறக்கப்பட்டது என்று சாட்சி கூறினார்.
இதேவேளை கணக்கைத் திறந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் அதாவது 1993 செப்டம்பரில் சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு சான்றிதழை வங்கி பெற்றுள்ளது என்றும் சாட்சி கூறினார்.
முன்னதாக, சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்காக ஹிஸ்புல்லா போலி ஆவணங்களை சமர்ப்பித்திருந்தாரென்றும் அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டது.
அத்தோடு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவபரங்களின்படி, ஹிஸ்புல்லாவின் இலங்கை ஹிரா அறக்கட்டளை கணக்கு 2016 முதல் 2019 க்கு இடையில் பதினைந்து பரிவர்த்தனைகள் மூலம் 313 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளது.
இரண்டாவது கணக்கிற்கு, மட்டக்களப்பு வளாகம் தனியார் லிமிடெட்க்கு 2016 செப்டம்பர் 09 அன்று வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு 2016 -2019 காலத்திற்குள் 3.6 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு நிதி கிடைத்ததாகவும் இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.