மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் குறிப்பிடத்தக்க அளவு வீடுகளிலேயே இடம்பெறுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அதிக அவதானமிக்க எல்லையில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நாற்பட்ட நோய் உள்ளவர்கள் புதிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
குறித்த பகுதிகளில் வாழும் வயோதிபர்கள் மற்றும் நாற்பட்ட நோய் உள்ளவர்களுக்கு வேறு நோய்களின் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அது காய்ச்சல், தடுமல், இருமல், தொண்டை வலி மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளாக இருக்கலாம்.
அப்படி இல்லை என்றால் பலவீனம், உணவு சுவை தெரியாமை, வாசனை தெரியாமை போன்ற நோய் அறிகுறிகளாக இருக்கலாம். அது அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
அப்படி இல்லை என்றால் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான நோய் அறிகள் தீவிரமடையும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் அடையாளம் காணப்பட்டவர்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் வீடுகளில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.