கொழும்பு – தெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரத்திபிம்பரம வீதி மற்றும் கெவும்வத்த பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்த பகுதிகளில் சுமார் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது முழுமையான முடக்கல் அல்ல, ஆனால் இந்த இடங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் ”என்று சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்று மட்டும் 472 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இறுதியாக கிடைக்கப்பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 211 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று நாள் முழுவதிலும் 472 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இலங்கையில் மொத்தமாக 22500 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன், 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்றும் எட்டுபேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.