இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து மூடிய அறைக்குள் சுமார் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்தரப்புப் பாதுகாப்புப் பற்றிய பேச்சுக்களுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த அஜித் டோவாலின் கொழும்பு நிகழ்ச்சி நிரலில் முன்னர் அறிவிக்கப்படாத இந்த சந்திப்பு சத்தம் சந்தடியின்றி நேற்று மாலை நடைபெற்றிருக்கின்றது.
அஜித் டோவால் கொழும்பை விட்டு நேற்று புறப்படுவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்குச் சம்பந்தனை அழைத்து அவருடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றமையை சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். “இலங்கையின் அரசியல் விவகாரங்கள், இலங்கையின் அபிவிருத்தி, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்படப் பல விடயங்கள் குறித்தும் பேசினோம்” என்றார்.
இலங்கை – மாலைதீவு – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கொழும்புக்கு வருகை தந்த இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே இந்தியத் தரப்பு வெளியிட்டிருந்தது.
இலங்கை ஜனாதிபதி, இலங்கைப் பிரதமர், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடனான சந்திப்புக் குறித்தெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தனுடனான சந்திப்பு முன்னர் குறித்தொதுக்கப்படவில்லை.
திடீரென – கடைசி நேரத்தில் அஜித் டோவால் புதுடில்லி புறப்படுவதற்கு முன்னர் அது நடைபெற்றிருக்கின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எத்தனம், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி ஆகியவை குறித்தெல்லாம் இந்தப் பேச்சில் ஆராயப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.