சிலாபம் – தங்கொட்டுவை, கட்டுகெந்த பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடமையாற்றும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் மீன்களை பொதி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 400 பேர் பணிப்புரிந்து வருகின்றனர்.
இவர்களில் 54 பேருக்கே கொரோனா தொற்றியுள்ளது. இந்த தொழிற்சாலையில் கடமையாற்றும் 73 ஊழியர்களுக்கு தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் ஊடாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தொழிற்சாலை நிறுவனம் இரண்டு முறை தனிமை வைத்தியசாலை ஒன்றின் ஊடாக 111 பேருக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் அவர்களில் 17 பேர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் ஊழியர்கள் தம்பதெனிய, தங்கொட்டுவை, பிங்கிரிய பிரதேசங்களில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொழிற்சாலையில் பணிப்புரியும் மேலும் சில ஊழியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.


















