அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை என புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து மீளமுடியாமல் திணறி வருகிறது. மட்டுமின்றி 2-வது அலை அமெரிக்காவில் புயல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கு அதிகமாகவும், மரண எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேலும் இருந்து வருகிறது.
இதனிடையே, ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியும்,
மார்டானா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும் மனிதர்களிடம் இறுதிகட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளன.
இந்த 2 தடுப்பூசிகளும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
இன்னும் சில நாட்களில் இந்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த மாட்டேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
அதனால் தடுப்பூசியை போட்டு கொள்ளுமாறு மக்களை கட்டாயபடுத்த மாட்டேன். தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்த அம்சங்களை வெளிக்காட்ட பொதுவெளியில் தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.
ஒரு ஜனாதிபதியாக எனது அதிகாரத்தில் உள்ள எல்லாவற்றையும் செய்வேன், மக்களை சரியானதை செய்ய ஊக்குவிப்பேன். அவர்கள் அதைச் செய்யும்போது, அது முக்கியமானது என்பது அவர்களுக்கு தெரியும்.
எனது பதவியேற்பு விழாவில் தொடக்க உரையில் 100 நாட்கள் முக கவசம் அணியுமாறு மக்களிடம் கேட்கப் போகிறேன். ஏனெனில் இது தண்டனையும் அல்ல. அரசியல் பிரச்சினையும் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.