காவல்துறை வன்முறைக்கு எதிராக பாரிஸ் நகரில் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்துள்ளது.
வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. பாரிஸ் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 42 பேர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கண்ணீர்ப்புகை வீச்சு நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் நகரம் மட்டுமின்றி பிரான்சின் முக்கிய நகரங்கள் பலவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் காவல்துறை வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், கடந்த வாரத்தைவிட தற்போது எண்ணிக்கை குறைவான மக்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தலைநகர் பாரிஸில் தொடக்கத்தில் அமைதி வழியிலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மட்டுமின்றி தொழிற்சங்கங்களும் பொதுமக்களுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்தனர்.
உள்விவகார அமைச்சர் பதவி விலக கோரிக்கை முன்வைத்ததுடன், ஜனாதிபதி மேக்ரான் போதும் நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரத்தில் திடீரென்று ஒரு கும்பல் உள்ளே புகுந்து, அமைதி வழியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியுள்ளது.
ஒரு சிறிய லொறி தீ வைக்கப்பட்டது, அத்துடன் ஏராளமான கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
பிரான்ஸ் முழுவதும் இன்று ஒரு நாளில் சுமார் 52,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பாரிஸ் நகரில் மட்டும் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த வாரம் பாரிஸ் நகரில் மட்டும் சுமார் 46,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.