ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் வெளிநாட்டு படைகளின் உதவியோடு கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் உள்ள கோக்யானி என்ற மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளை குறிவைத்து அதிரடியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் மேலும் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர் எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் பொலிஸாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களை ஒடுக்கும் விதமாக இராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிற நிலையிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.