பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பார் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த முதியவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார் என்றும், அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கொழும்பில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து திருநாவலூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவரும் தாய் தந்தையரும் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போதே அவரது தந்தையான குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


















