ஆபத்தான கொரோனா நிலைமைக்கு இலங்கையும் செல்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கிறது.
நேற்று கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் GMOA இன் பிரதம செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே இதனை தெரிவித்தார்.
இலங்கையில் தினசரி 200-500 க்கு இடையில் இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 500 ஐ தாண்டிவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர், சில நாட்கள் 600-800 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர், ஏழு முதல் எட்டு மாத காலப்பகுதியில் நாட்டில் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஒக்டோபரில் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளன, நவம்பர் மாதத்தில் 100 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நவம்பர் இறுதியில் சில நாட்களில் ஏழு முதல் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
தினசரி பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, குணமடைபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
தினமும் 300-400 நோயாளிகள் வெளியேற்றப்படுகையில், புதிதாக வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக உள்ளது. தினசரி 600 அல்லது 700 ஆக தொற்றாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்குள் உள்ள திறன்கள் குறித்து கவலைகள் எழும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பொதுமக்கள் தமது பொறுப்பை புறக்கணித்தால் மற்றும் அதிகாரிகள் பொருத்தமான முடிவுகளை எட்டத் தவறினால், நாட்டின் சுகாதாரத் துறை பாதிக்கப்படக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


















