கருணா தனது கைகளால் இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் சட்டம் செயற்படுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வரும் போது கூறிய விடயங்கள் செயற்பாட்டில் தலைகீழாகவே உள்ளது.
கருணா தனது கைகளால் இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் சட்டம் செயற்படுத்தப்படவில்லை.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பெருமளவான கைதிகள் உள்ளனர். அவர்கள் வேறு வகையிலும் கருணா போன்றோர் வேறு வகையிலுமே பார்க்கப்படுகின்றனர்.
பிள்ளையானுக்கு பிணை வழங்கப்படுகின்றது. ஆனால் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறாக பிணை வழங்கும் செயற்பாடுகள் இல்லை.
பிள்ளையானுக்கு ஒரு சட்டமும், கருணாவுக்கு ஒரு சட்டமும் சாதாரண சிறைக் கைதிகளுக்கு வேறு சட்டமும் இருக்கின்றது.
சட்டவாட்சியை பாதுகாக்கும் வகையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தன.
நீதிமன்றங்களுக்கு இந்த ஆணைக்குழுவின் ஊடாகவே நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இப்போது 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு நியமிக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அப்போது என்ஜீஓ காரர்களிடமே ஆணைக்குழுக்கள் இருந்ததாக கூறுகின்றனர். அப்படியாயின் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜீவன் தியாகராஜா யார்.
இவர் என்ஜீஓ இல்லையா? தேர்தல் பிரசார முகாமையாளர்களே சில ஆணைக்குழுக்களில் தலைவர்களாக இருக்கின்றனர். இந்த இடத்தில் சட்டத்தின் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்றார்.
இதேவேளை முன்னதாக தனது கைகளால் இராணுவத்தை கொலை செய்ததை கருணா கூறியதை அடுத்து அவருக்கு எதிராக பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்திருந்தன.
எனினும் காலப்போக்கில் இந்த விடயம் மறைந்து போன நிலையில் நேற்று நாடாளுமன்றில் மீண்டும் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.