இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமால் ஆக்கப்பட்ட சம்பவம், 34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு, இன்னமும் நீதி நிலைநாட்டப்படாதது ஏன்?
‘நாட்டில் மோசமான, சர்வதேசக் குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே, சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம். அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்து தடுத்து வைத்திருப்பது குறித்தும் எம்.ஏ. சுமந்திரன் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சட்டத்தரணி ஹிஸ்புல்லா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தால் அதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், எட்டு மாதங்களுக்குப் பிறகும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் சட்டத்தரணி ஹிஸ்புல்லா தடுப்பு காவலில் இருக்கிறார் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சட்டத்தரணி ஹிஸ்புல்லா முன்னிலையான வழக்குகள் தொடர்பான கோப்புகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.



















