மனிதர்களிற்கும் யானைக்குமிடையிலான மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானை இறப்புகள் இலங்கையில் பதிவாகியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
மனித-யானை மோதல் குறித்த சிறப்பு அறிக்கையின் அடிப்படையில் பொதுக் கணக்குகளுக்கான குழுவின் (கோபா) கூட்டத்தில் இது தெரியவந்தது.
உலகில் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகளைப் பதிவாகியுள்ளது.
மனித-யானை மோதல் தொடர்பில் பல ஆண்டு ஆராய்ச்சி அனுபவங்களைக் கொண்ட நிபுணரான பேராசிரியர் பிருதிவிராஜ் பெர்னாண்டோ, இந்த விஷயத்தின் தற்போதைய நிலை குறித்து கோபாவுக்கு விளக்கினார்.
மனித- யானை மோதலால் இலங்கையில் இறக்கும் யானைகளின் சராசரி எண்ணிக்கை ஆண்டுதோறும் 272 என்றாலும், கடந்த ஆண்டில் 407 யானைகள் இறந்துவிட்டன என்று திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.
மனித-யானை மோதலால் சராசரியாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 85 ஆக இருந்தாலும், 2019 இல் 122 பேர் இறந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
மோதலைத் தீர்ப்பதற்கு வனவிலங்குத் துறை மற்றும் பிற தொடர்புடைய அலகுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை கோபா வலியுறுத்தியது.
மனித-யானை மோதலைத் தீர்க்க 60 ஆண்டுகால முயற்சிகள் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லாமல் மோசமாகிவிட்டது என்று கோபா தலைவர் திஸ்ஸ விதாரண கூறினார்.


















