உத்தரபிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான இளம்பெண், பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த சில நாட்களிலேயே இந்த திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு ஒரு நாள் கழித்து நேற்று, இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமண போட்டோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை அடுத்து போலீசாருக்கு திருமணத்தைப் பற்றி தெரிய வந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு புகார் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அம்ரோஹாவில் உள்ள டிடவுலி காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
மொராதாபாத்தில் இந்த திருமணம் நடைபெற்றது என்று அம்ரோஹா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அஜய் பிரதாப் சிங் தெரிவித்தார். போலீசார் ஏற்கனவே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
“நாங்கள் இப்போது பாதிக்கப்பட்டவரை வரவழைத்து அவரது அறிக்கையை பதிவு செய்வோம். அதன் அடிப்படையில் மேலும் நடவடிக்கை தொடங்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண், தனது புகாரில், அவரின் பக்கத்து வீட்டு இளைஞரான முஜீப் அகமதுவுடன் உறவு வைத்திருப்பதாகக் கூறியிருந்தார்.
திருமணம் செய்வதாகக் கூறி, முஜீப் அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது, முஜீப் பெண்ணை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார்.
அக்டோபர் 21’ம் தேதி, முஜீப் அந்த பெண்ணை பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் அங்கு சென்றதும், அவரும் ஒரு நண்பரும் ஒரு காரில் வந்து அவரைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓடும் காரில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதையும் வீடியோவாக எடுத்துள்ளனர்.
பின்னர், இருவரும் அந்த பெண்ணை தங்கள் நண்பர்களிடம் ஒப்படைத்தனர். காஜியாபாத் செல்லும் வழியில் மற்றொரு காருக்கு மாற்றப்பட்ட அந்த பெண்ணை, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர், அவர்கள் பெண்ணை சாலையில் தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தகவல் தெரிவித்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆட்டோரிக்ஷா டிரைவரின் உதவியுடன் வீடு திரும்பினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் விவரித்தார். பின்னர் தனது புகாரை போலீசில் பதிவு செய்யச் சென்றார்.
முஜீப் அகமது மற்றும் அவரது நண்பர்கள் ஜாக்கி பாஷா, வசீம், அனஸ் பாஷா, ஜாம்ஷெட் மற்றும் ஹசீப் ஆகியோருக்கு எதிராக வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன்னை கெடுத்தவர்களில் ஒருவரையே அந்த பெண் திருமணம் செய்துள்ள நிலையில், பெண் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



















