தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம். அதுதான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்ட தவறு என பொதுமக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை கூறினார். தொடர்ந்து கூறுகையில்,
“இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். அதை விடுத்து எமது நாட்டில் கூட்டாட்சியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அவர்கள் மற்றைய நாடுகளுடன் கலந்துரையாடினால்,அவர்கள் செய்து கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு எதிராகவே நடந்து கொள்கின்றனர்.
அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பிழை செய்து விட்டாரென நான் நினைக்கிறேன். இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர் அனுதாபம் காட்டியுள்ளார்.
ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட போது அவரது நாசி அரசியல் கட்சி அழிக்கப்பட்டது. அதேபோல் பொல்பொட் கொல்லப்பட்ட போது கைமர்ரோக் அரசியல் கட்சியும் அழிக்கப்பட்டது. அவ்வாறே சதாம்ஹூசெய்ன் கொல்லப்பட்ட போது அவரது பாத் அரசியல் கட்சி முடக்கப்பட்டதுடன்,ஹொஸ்னி முபாரக் தோற்கடிக்கப்பட்ட போது அவரது தேசிய அரசியல் கட்சியும் முடக்கப்பட்டது.
எனினும் உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமான புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம். அதுதான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்ட தவறு.
அவர் தமிழ் அரசியல்வாதிகள் மீது அனுதாபம் காட்டி அவர்களை மன்னித்து விட்டார். அதனால் புலிகளின் பினாமி கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது அந்த அனுதாபத்தை தனக்கு அனுகூலமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.
சுமந்திரன் மற்றும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் சிங்களவர்களை வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசி வருவதுடன் சிங்களவர்கள் நாடாளுமன்றத்துக்கு வரக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
நாம் யுத்தக் குற்றங்களை இழைத்திருந்தோம் என்பதை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததால்தான் நான் ஜெனீவா சென்றேன்.
அங்கு உலகப் பிரபல்யம் பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பான சட்டவிற்பன்னர்கள் இலங்கை யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
எவ்வாறெனினும் அப்போதைய இலங்கை வெளிநாட்டமைச்சராக இருந்த மங்களசமரவீர ஜெனீவாவுக்குச் சென்று நாம் யுத்தக் குற்றங்களை இழைத்ததாக ஏற்றுக் கொண்டதுடன், எமக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் 30/1 தீர்மானத்தையும் இணைஅனுசரணைக்கு உட்படுத்தினார்.
எந்தவொரு வாக்கெடுப்பும், விவாதமும் இன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு அதனை அங்கீகரித்தது.47 நாடுகள் எம்மை ஆதரிக்கப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னர்,நான் ஜெனீவா சென்று எனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய காலவரையறையில் எமது பக்கத்து வாதத்தை முன்வைத்தேன். என்னால் முடிந்ததை நான் செய்தேன்.” என்றார்.



















