தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொறடா பதவிக்காக சிறிதரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுக்கினருமான த.சித்தார்த்தன்.
கொறடா பதவியை சிறிதரன் நேர்மையாக கையாளவில்லையென கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கருத்தையும், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.மின்னல் நிகழ்ச்சியில் நேற்று (13) கலந்து கொண்டிருந்த போது இந்த தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
கடந்த 6ஆம் திகதி மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறிதரன், கொறடா பதவி தனக்கு கால் தூசு என கூறியதுடன், சித்தார்த்தனை மோதலிற்கு அழைக்கம் பாணியில் கருத்துக்களை கூறியிருந்தார். எனினும், அதன் பின்னர் நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், கொறடா பொறுப்பை தக்க வைத்திருக்க வேண்டுமென்பதற்காக, கூட்டத்திலிருந்து எழுந்த வெளியில் சென்றிரு்தார்.
இது குறித்து த.சித்தார்த்தன் இன்று கருத்து தெரிவித்தபோது,
கடந்த பாராளுமன்ற காலத்திலேயே கொறடா பதவி குறித்து பல தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிருப்தியுடன் இருந்தார்கள். தமக்கு நேரம் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதில்லையென அவர்களில் பலர் கூறியிருந்தனர்.
நாங்கள் நேரம் கேட்கின்ற போது, அனேகமாக கிடைப்பதில்லை. நாம் பேசத் தெரியாமல் நாடாளுமன்றத்தில் பேசாமல் விடவில்லை. தேவையெனில் பங்காளிக்கட்சி எம்.பிக்கள் அல்லது கடந்த முறை நாடளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ் அரசு கட்சியனரை கேட்டாலும் அவர்கள் சொல்வார்கள்.
முதலாவது சிறிதரன், பின்னர் சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராசா இவர்களிற்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அதில் மிஞ்சினால்தான் மற்றவர்களிற்கு கொடுக்கப்படும். அதிலும் குறிப்பாக சம்பந்தன் பேசும் நாளில் எங்களிற்கும் நேரம் ஒதுக்குவார்கள் சம்பந்தன் பேசிக் கொண்டிருப்பார். நேரம் முடிந்தது என்றால், எங்கள் நேரத்தை கேட்பார். நாம் அதை நிராகரிக்க முடியாது.
கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் எம்.ஏ.சுமந்திரனின் சில கருத்துக்கள் சர்ச்சையாகவும், பின்னடைவாகவும் இருந்தது. அவரை பேச்சாளர் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டுமென தமிழ் அரசு கட்சியில் இருந்துதான் அதிகமாக கேட்டார்கள். இதனால்தான் பேச்சாளர், கொறடா இருவரையும் மாற்றும் நிலைப்பாடு ஏற்பட்டது.
இந்த வரவு செலவு திட்டத்தில் வினோ நோகராதலிங்கம் 2 முறைதான் பேசியிருக்கிறார். அவர் பலமுறை கேட்டும் நேரம் கொடுக்கப்படவில்லை. செல்வம் அடைக்கலநாதன் 4 முறைதான் பேசியிருக்கிறார். இதுதான் பிரச்சனை.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பேச்சாளர் விவகாரம் எழுப்பப்பட்டபோது, சுமந்திரன் தான் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி, அந்த இடத்திற்கு சிறிதரனை பிரேரித்தார். சிறிதரனை 5 பேர் ஆதரித்தனர். செல்வத்தை 4 பேர் ஆதரித்தனர். அப்போது, சம்பந்தன் அண்ணை, தானும் செல்வத்தை ஆதரிப்பதாக கூறினார்.
அப்போது என்னிடம் கேட்டார், தம்பி.. பேச்சாளராக செல்வத்தையும், கொறடாவாக சிறிதரனையும் போடலாமா? கொறடா பதவியை விட்டு தருகிறீர்களா?“ என.
“நான் அந்த பதவியை கேட்கவேயில்லையே. அதை சிறிதரனிற்கு கொடுத்து, பிரச்சனையை சுமுகமாக முடியுங்கள்“ என்றேன்.
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. சம்பந்தன் எவ்வளவோ சொன்னார். அவர்கள் கேட்கவில்லை.
இந்த கதிரையில் (மின்னல் நிகழ்ச்சி) கடந்த வாரம் வந்து வீரமாக பேசிய சிறிதரன், கொறடா பதவி எனக்கு கால் தூசி என்றார். ஆனால், கடந்த வியாழக்கிழமை நடந்த சம்பவத்தையும் உங்களிற்கு கூற வேண்டும்.
அன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. அப்போது வினோ நோகராதலிங்கம், கொறடா மற்றும் பேச்சாளர் பதவியை பற்றி பேசலாம் என. நானும் ஆமோதித்தேன். இப்பொழுது சம்பந்தன் கொஞ்சம் வீக்காக இருக்கிறார், அவர் அதை என்னவென கேட்பதற்குள், சிறிதரன் எழுந்து வெளியில் சென்று விட்டார். அதை தொடர்ந்து மற்றைய எம்.பிக்கள் போய்விட்டார்கள்.
இந்த இடத்தில் வீராப்பாக பேசிவிட்டு, மூடிய அறைகளிற்குள் எப்படி நடக்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத்தில் நான் பேசவில்லையென சிறிதரன் கூறியிருக்கிறார். கடந்த பாராளுமன்றத்தில் முக்கிய பணியொன்று எனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. புதிய அரசியலமைப்பிற்கான உபகுழுவொன்றின் தலைவராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். நாங்கள் முக்கியமான வரைபொன்றை வழங்கியுள்ளோம். அதை என்னால் செய்ய முடியுமென்பதாலேயே சம்பந்தன் அண்ணை என்னை அதற்கு நியமித்திருந்தார்.