பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசியை முதலில் பெறுபவர்களில் ஒருவராக இருப்பது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 8ம் திகதி பொதுசன குடித்தொகைக்கு கொரோனா தடுப்புமருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்படி, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மார்கரெட் கீனன் என்ற 90 வயதுடைய மூதாட்டிக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.
உள்ளூர் நேரப்படி 8ம் திகதி காலை 6:31 மணிக்கு பல்கலைக்கழக வைத்தியசாலையில் ஃபைசர் / பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியைப் மார்கரெட் கீனன் பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு பிரித்தானியாவில் சர்ரேயில் உள்ள ஃப்ரிம்லி பார்க் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய நிபுணர் பிரேம் பிரேமச்சந்திரன், அதே நாளில் காலை 8 மணிக்கு தடுப்பூசி பெற்றுக்கொண்டார்.
குறித்த வைத்தியசாலையில் தடுப்பூசி போட்ட முதல் நபராக வைத்தியர் பிரேம் பிரேமச்சந்திரன் இடம்பெற்றுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் இலங்கையராகவும் இவர் இருக்கலாம் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பிறந்த வைத்தியர் பிரேம் பிரேமச்சந்திரன், கடந்த 24 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், தடுப்பூசி போடப்பட்டமை குறித்து கருத்து வெளியிடுகையில்,
“இது ஒரு காய்ச்சல் தடுப்பூசி போன்றது. நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை, இதுவரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. நான் இன்றும் வேலைக்குச் சென்றேன்.”
இது முதல் தடுப்பூசி என்பதால் விளைவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
தடுப்பூசி பெறுவதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளை நாம் தொடர வேண்டும், ஏனென்றால் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















