முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பகுதிகளில் விவசாயிகளுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இருவேறு தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மை நாட்களாக கால்நடை பண்ணையாளர்களின் மாடுகள் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் மூன்று மாடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் அப்பகுதியில் உள்ள விவாசயிகளினால் மேற்கொள்ளப்பட்டது என கால்நடை பண்ணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே விவாசாயிகளுக்கும் கால்நாடை பண்ணையாளாகளுக்கும் இடையில் இன்று மோதல் ஏற்பட்டது. எனினும் குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் ஒன்றிணைத்து விவசாயிகள் மற்றும் கால்நடை பண்ணையாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களை தவிர்த்து சமாதானப்பட்டுத்த உதவியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரைகளை அமைக்க வேண்டிய தேவையிருப்பதாக மாவட்ட கால்நாடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
காலபோகச்செய்கையின் போது முழுமையான விவசாய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில் மேச்சல்தரை என்பது மிகப்பாரிய பிரச்சினையாகவுள்ள போது இதுவரை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கவில்லை என கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















