ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் காலி செய்ய லதா ரஜினிகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளரும், நடிகர் ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். பள்ளியின் இடம் வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் ஆகியோருக்கு சொந்தமானது. இந்த இடத்தில் வாடகை பாக்கி பிரச்சனை இருந்து வந்தது.
இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான பள்ளி வாடகை பாக்கி ரூ.1.99 கோடியை செலுத்த உத்தரவிடக்கோரி இடத்தின் உரிமையாளர்கள் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்திடீரென பள்ளியின் கதவை உரிமையாளர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி திறக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.ஆனால் தொடர்ந்து வாடகை பிரச்சினை நீடித்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்து கொடுப்பதாக ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், கொரோனா காரணமாக உறுதியளித்தப்படி இடத்தை காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசம் கேட்டு சங்கத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் கூடுதலாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்திற்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு காலி செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உள்ளாக நேரிடும் என அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார்.