கனடாவில் திருட்டு குற்றச்சாட்டில் 5 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து பணியாளர்களை அறைக்குள் கட்டி வைத்து விட்டு, கொள்ளையிட்டுள்ளனர்.
ஜனவரி 6, 2020 முதல் ஒக்டோபர் 19, 2020 வரை கிங்ஸ்டன் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த மூன்று கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் டொரொன்டோ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஐந்து பேரும் முகத்தை மறைத்துக் கொண்டு வர்த்தக நிலையங்களிற்கு சென்றுள்ளனர். தம்மிடம் வாள்கள் உள்ளது, முரண்டு பிடித்தால் வெட்டிச் சரித்து விடுவோம் என மிரட்டி, வர்த்தக நிலைய ஊழியர்களை களஞ்சிய அறைகளிற்குள் பலவந்தமாக அடைத்துள்ளனர். சில ஊழியர்களை கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்களில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு, வாகனமொன்றையும் திருடி, அதில் தப்பிச் சென்றுள்ளனர்.
டிசம்பர் 15, 2020 செவ்வாயன்று, டொராண்டோ பொலிஸ் புலனாய்வாளர்கள், டொராண்டோ போதைப்பொருள் மற்றும் பல பிரதேச முக்கிய குற்றப் பிரிவுகளின் உதவியுடன் ஐந்து சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
டொராண்டோவைச் சேர்ந்த லக்ஷ்மன் பத்மராஜா (25), ராகுலன் குமாரசலம் (24), லபீஷன் கலைவாணன் (21), சேரன் விக்னேஸ்வரன் (21), விட்பியைச் சேர்ந்த மதுசன் துரைராஜசிங்கம் (21) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நேற்று முன்தினம் (15) புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 1911 எக்ளிண்டன் அவென்யூ ஈஸ்ட், அறை 412 இல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் பற்றிய வேறு தகவல்கள் உள்ளவர்கள் 416-808-7350 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ள கோரப்பட்டுள்ளனர்.