நிறைமாத பசுமாடு ஒன்றினை இனம் தெரியாத நபர்கள் கடத்தி கொலை செய்து இறைச்சி ஆக்கியுள்ளனர்.
வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்து வந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று இறைச்சியாக்கியுள்ளனர்.
குறித்த பசுமாடு 20 நாள்களுக்குள் கன்று ஈனுவதற்கு இருந்தாக அதனை வளர்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்டை தீவு சந்தியில் இராணுவம் , பொலிஸாரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தீவகத்தில் தொடர்ந்து பசுமாடுகள் உள்பட மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவதனால் மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.



















