அரச அதிகாரிகளிடம் போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை ஐந்து வருடங்கள்வரை சிறை வைக்கவும் முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வைத்தியசாலையில், பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளுக்காக செல்லும்போது அரச அதிகாரிகள் உங்களது விபரங்களை கேட்கும்போது , அவர்களுக்கு உண்மையான விபரங்களை வழங்குமாரும் அவர் கூறினார்.
அத்துடன் சிலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அரச அதிகாரி ஒருவரிடம் போலியான பெயரை அல்லது முகவரியை தெரிவிப்பது குற்றச் செயற்பாடாகும்.
அதற்கமைய போலியான பெயரை தெரிவித்தால் அது இன்னுமொரு நபரைப் போன்று தன்னை அடையாளம்படுத்திக் கொண்டமை என்ற குற்றச்சாட்டின் கீழும், ஏதாவது ஆவணம் தயாரிக்கும்போதும் போலியான தகவல்களை வழங்கினால் போலி ஆவணங்களை தயாரித்தமை என்ற குற்றச்சாட்டின் கீழும் அவர்கள் குற்றவாளியாகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



















