நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் கூட்டணி குறித்து தெளிவான விளக்கம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வேகம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம், எப்படி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகின்றன.
முன்பு திமுக மற்றும் அதிமுக என இரண்டும் பெரும் கட்சிகள் இருந்தன, ஆனால் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மக்களிடையே அந்தளவிற்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கமலின் அரசியல் வருகை, நடிகர் ரஜினியின் அரசியல் வருகை, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் ஒரு தனி செல்வாக்கும் போன்றவை, இந்த அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதனால் இந்த முறை யார் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப்போவது என்று தெரியவில்லை. அதற்கிடையில் குறிப்பிட்ட சில கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவுடனும், ரஜினி மற்றும் கமல் கூட்டணி சேரப்போவதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில், ஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களுடன், ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கூட்டணி குறித்தும், ரஜினி-கமல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், யார் யாருடன் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். நான் மக்களுடன் கை கோர்க்கிறேன். நாங்க தனித்தே போட்டியிடுவோம். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம்.
யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள், இல்லை என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. ரஜினி-கமல் கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. எங்கள் கொள்கை, பாதை, பயணம் தனியானது.
ஆகையால் தனித்தே போட்டியிடுவோம். பெருந்தலைவர் வழியில், ஜீவானந்தம், சிங்காரவேலர், கக்கன் வழியில் நாங்கள் நேர்மையான தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் நினைப்பதாக திட்டவட்டமாக கூறியுள்ளார்.


















