பிரித்தானியாவில் தாயார் ஒருவர் கொதிக்கும் நீரை தமது 19 மாத பெண் குழந்தை மீது ஊற்றி, அதன் மரணத்திற்கு காரணமான நிலையில், தற்போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியரான 26 வயது கேட்டி க்ரோடர் என்பவரே, போதை மருந்தின் தாக்கத்தில் தமது பிஞ்சு குழந்தையை கொதிக்கும் நீரில் மூழ்க வைத்துள்ளார்.
இதில் உடல் முழுவதும் காயமேற்பட்ட அந்த பிஞ்சு குழந்தை ஒரு நேரத்தில் பரிதாபமாக மரணமடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கேட்டி க்ரோடர் கைதாகும் போது, அவரது ரத்தத்தில் போதை மருந்தின் அம்சம் கலந்திருந்ததை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணையின் போது, இது ஒரு விபத்து எனவும், தமது மகளை தாம் அக்கறையுடன் கவனித்து வந்ததாகவும், ஒருபோதும் துன்புறுத்தியது இல்லை என கேட்டி க்ரோடர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை கொதிக்கும் நீரில் தவறி விழுந்தது என்றே அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கேட்டி க்ரோடரின் வாதங்கள் எதையும் நம்ப தயாரில்லை என தெரிவித்த நாட்டிங்ஹாம் கிரவுன் நீதிமன்றம், அவருக்கு 26 ஆண்டுகள் சிறைவாசம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஒரு விபத்தினால் ஏற்படும் காயங்கள் அல்ல, குழந்தையின் தேகத்தில் காண நேர்ந்தது என தெரிவித்துள்ள நீதிபதி Jeremy Baker, அந்த பிஞ்சு குழந்தைக்கு ஏற்பட்டது துன்பகரமானது மட்டுமல்ல யாருக்கும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றார்.
மட்டுமின்றி மருத்துவ அறிக்கையில், அந்த பிஞ்சு குழந்தை வலியால் அலறித்துடித்திருக்கும், குளியலறை தொட்டியில் இருந்து வெளியேற கடுமையாக போராடி இருக்கும் என்பதும் தெளிவாகிறது என குறிப்பிட்ட நீதிபதி,
கண்டிப்பாக குழந்தையின் மரணம் உடனடியாக நிகழ்ந்திருக்காது என்றும், மரண வலியை அனுபவித்த பிறகே அது இறந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
குழந்தை இறந்தது தெரிய வந்த பின்னரே கேட்டி க்ரோடர் தமது பெற்றோரை அழைத்து உதவி கோரியுள்ளார்.
இருப்பினும், கேட்டி க்ரோடர் ஏன் தமது பிஞ்சு குழந்தையை இத்தனை கொடூரமாக கொன்றார் என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.
26 வயதான கேட்டி க்ரோடர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என கூறப்படுகிறது.