அமெரிக்காவில் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்படலாம் என்பது குறித்து அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவை தொடர்ந்து Pfizer-BioNTech தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா, ஒரு வாரத்திற்கு முன்பு நாட்டில் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கியது.
சமீபத்தில் இரண்டாவதாக மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், Pfizer-BioNTech கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் போஸ் போடப்பட்ட பலருக்கு ‘anaphylaxis’ என்று அழைக்கப்படும் கடுமையான ஒவ்வாமை பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் (CDC) உறுதிப்படுத்தியுள்ளது.
CDC வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தடுப்பூசிகளுடக்கு கடுமையான ஒவ்வாமை பக்கவிளைவுகளின் வரலாற்றைக் கொண்டவர்களை தவிர, உணவு, விலங்குகள், சுற்றுச்சூழல் அல்லது இரப்பர் மரப்பால் போன்றவையால் ஒவ்வாமை பக்கவிளைவு பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போடலாம் என தெரிவித்துள்ளது.
எப்போதாவது கொரோனா தடுப்பூசியில் உள்ள ஏதேனும் மூலப்பொருளால் கடுமையான ஒவ்வாமை பக்கவிளைவால் பாதிக்கப்பட்டவர்கள், Pfizer-BioNTech தடுப்பூசியை பெறக்கூடாது என்று CDC பரிந்துரைத்துள்ளது.
பிற தடுப்பூசிகள் அல்லது ஊசி மருந்துகளுக்கு கடுமையான ஒவ்வாமை பக்கவிளைவு எற்பட்டிதிருந்தால், அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற வேண்டுமா என்று அவர்களின் மருத்துவரிடம் கேட்க வேண்டும்.
தடுப்பூசி போடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் உதவுவார் என CDC தெரிவித்துள்ளது.