அறுபதிலும் ஆசை வந்த ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவர் யுவதியுடன் விடுதியொன்றிற்கு சென்று, இரண்டரை இலட்சம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.
பொதுச்சுகாதார பரிசோதகராக நடித்த ஆசாமி, கணக்காளருடன் விடுதிக்கு சென்ற யுவதிக்கு கொரோனா தொற்று உள்ளதாக கூறி, தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பாமல் இருக்க இந்த பணத்தை மோசடி செய்துள்ளார்.நீர்கொழும்பில் இந்த சம்பவம் நடந்தது.
கொச்சிக்கடை தொப்புவ பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற 65 வயதான கணக்காளர் ஒருவர் இளம் பெண்கள் மீது மையல் கொண்டிருந்தார். வீட்டிற்கு தெரியாமல், யுவதிகளுடன் விடுதிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அண்மையில், 25 வயதான இளம் யுவதியொருவரை அழைத்துக் கொண்டு சீதுவ பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
தற்போது கைதான பிரதான சந்தேகநபரும், அவரது நண்பர்கள் இருவரும் அதை அவதானித்துள்ளனர். இதில், பொலிஸ் சேவையிலிருந்து இடைநீக்கப்பட்ட ஒருவரும் உள்ளடங்குகிறார்.
பின்னர், கணக்காளரை அணுகிய நபர், தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் என குறிப்பிட்டு, அவருடன் உல்லாசமாக இருந்த யுவதிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், கணக்காளரை தனிமைப்படுத்தல் மையத்திற்கு செல்ல தயாராகுமாறும் கூறியுள்ளார்.
செய்தியை கேட்டு வெலவெலத்த கணக்காளர், இந்த விடயம் மனைவி, பிள்ளைகள் மற்றும் ஊருக்கு தெரிந்தால் விவகாரமாகி விடும் என நினைத்து, பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சரணடைந்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் தனது குடும்பம் குலைந்து விடும் என்பதால், தனிமைப்படுத்தலிற்கு செல்லாமல் தவிர்க்கலாமா என கேட்டுள்ளார். அதிகாரிகளை சமரப்படுத்த ஒரு தொகை பணம் செலவாகுமென பொதுச்சுகாதார பரிசேதாதகர் தெரிவித்தார்.
கணக்காளர் சம்மதித்தார். அதிகாரிகளிற்கு மதுபானம் வாங்க இரண்டரை இலட்சம் ரூபா செலவாகும் என பொதுச்சுகாதார பரிசோதகர் கூறினார். வேறு வழியின்றி, கணக்காளர் அந்த பணத்தை கொடுத்தார்.
எனினும், சில நாட்களின் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணக்காளர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார். இதன்படி போலி பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு, நீ்ர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் தேடப்படுகிறார்கள்.