எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கொள்கை அடிப்படையில் பரந்துபட்ட கூட்டணி உருவாகினால், அதில் இணைந்து கொள்வதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கொள்கையளவில் முடிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில், க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தன் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கட்சிகள் அணிகளாக பிரிந்து நிற்பது தமிழ் தேசியத்தை மேலும் பலவீனப்படுத்தும், குறிப்பாக கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவதெனில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுசேர வேண்டுமென அண்மைக்காலமாக மேலெழுந்த வரும் அப்பிராயங்கள் பற்றி இதன்போது பேசப்பட்டது.
கிழக்கு மாகாணசபையில் கூட்டணியாக போட்டியிட்டு, வடக்கில் பிரிந்து நின்று செயற்படுவது பொருத்தமான அரசியல் செயற்பாடு அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே, கொள்கையின் அடிப்படையில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கி- அதை தமிழர் தாயகம் முழுவதற்குமான கட்டமைப்பாக மாற்றும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளலாமென தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த நடவடிக்கையை வெற்றியடைய செய்வது தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளில் தங்கியிருப்பதை சுட்டிக்காட்டி, தமிழ் அரசு கட்சி அந்த நடவடிக்கையை நேர்மையாக முன்னகர்த்தினால் அந்த கூட்டணியில் இணைந்து கொள்ளலாமென தீர்மானிக்கப்பட்டது.


















