கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம், சரியான ஆய்வுகளை மேற்கொள்ளாது பிரபலமான நிலைப்பாட்டுக்கு சார்பாக செயற்படுவது மோசமான நிலைமை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் மருத்துவ விஞ்ஞானம் சம்பந்தமான நிபுணர்கள் இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக ஆராயாது, ஆய்வு செய்யாது பிரபலமான நிலைப்பாட்டுக்கு சார்பாக இருந்து இந்த அரசாங்கமும், அதன் தலைவர்களும் மோசமான நிலைமைக்கு செல்வார்கள்.
நிபுணர்கள் குழுவை நியமித்து அவர்களிடம் இருந்து பரிந்துரைகளை பெறுங்கள். மதங்களை சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்படியான எந்த வேலைத்திட்டத்தையும் காணமுடியவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கம் முடிவு எடுக்கின்றது. மீண்டும் உடல்களை கொண்டு சென்று குளிர்சாதன பெட்டிகளில் வைக்கின்றனர். ஏன் இந்த மோசமான வேலை?.
இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் மதம் சார்ந்த உரிமை. மண்ணில் இருந்தே மனிதன் படைக்கப்பட்டான் என அவர்கள் நம்புகின்றனர்.
இதனால் இறந்த பின் மண்ணுக்கு உரமாக வேண்டும் என்பது மத நம்பிக்கை. அது முஸ்லிம் கலாச்சாரம். மத உரிமை.
இந்த மத நம்பிக்கையை புதைக்கும் போது அனைவரும் எரிந்து போவார்கள். இது பயங்கரமானது. தமிழர்களின் பிரச்சினை தேசிய பிரச்சினை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முஸ்லிம்களின் பிரச்சினை மதம் சார்ந்த பிரச்சினை. மத பிரச்சினை மிகவும் உணர்வுபூர்வமானது.
நான் சரியானவற்றுக்கோ குரல் கொடுப்பேன். பிரபலமான நிலைப்பாடுகளுக்காக குரல் கொடுக்க மாட்டேன் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


















