ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றறிய 18 வயது இளம்பெண் கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருக்கும் அசோக் நகரில் பெற்றோருடன் வசித்து வருபவர் 18 வயது சினேகலதா. மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜேஷ் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில், வேலைக்கு சேர்ந்து 15 நாட்களே ஆகிய நிலையில், நேற்று காலை வேலைக்கு சென்ற சினேகலதா வீடு திரும்பவில்லை.

இதுபற்றி சினேகா லதாவின் தாய் லட்சுமி தேவி, போலீசில் புகார் அளித்தார்.
“உன் மகள் சிறு குழந்தை கிடையாது. வீட்டிற்கு வந்துவிடுவார்“ என போலீசார் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இதையடுத்து சினேக லதா வீடு திரும்பாததால், போலீசார் இன்று காலை விசாரணையில் ஈடுபட்ட போது சினேகலதாவின் உடல் தர்மாவரம் அனந்தபுரம் இடையே காட்டுபகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பின், அவசர அவசரமாக சினேகலதா காணாமல் போனது பற்றி வழக்குப்பதிவு செய்த அனந்தபுரம் போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த சினேகலதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் ஒரு தலையாக காதலித்து வந்த ராஜேஷ் உட்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சினேகா காதலை ஏற்க மறுத்ததால் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.



















