தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 340 ஓட்டங்களை எடுத்துள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டியானது நேற்றைய தினம் செஞ்சுரியனில் ஆரம்பமானது.
இதில் டாஸ் வென்று துடுப்பெடுத்த இலங்கை அணியானது 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
அதன்படி ஆரம்ப வீரராக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 22 ஓட்டங்களிலும், குசல் மெண்டீஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க குசல் பெரேராவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக கைகோர்த்த தினேஷ் சண்டிமாலும் தனஞ்சய டிசில்வாவும் மீட்டெடுத்தனர்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 45 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 79 ஓட்டங்களுடனும், சண்டிமால் 41 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
அதன் பின்னர் தனஞ்சய டிசில்வா உபாதை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்த சந்திமாலுடன் நிரோஷன் டிக்வெல்ல கைகோர்த்து துடுப்பெடுத்தாடினார்.
இதன் காரணமாக இலங்கை அணி 65 ஓவர்களுக்கு 283 ஓட்டங்களை குவித்தது. அதன் பின்னர் சண்டிமால் 65.4 ஆவது ஓவரில் வியான் முல்டரின் பந்து வீச்சில் டூப்பிளஸ்ஸிடம் பிடிகொடுத்து 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சண்டிமாலின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய தசூன் சானக்கவுடன் கைகோர்த்த திக்வெல்லவும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காது 70.3 ஆவது ஓவரில் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
தொடர்ந்து வந்த வனிந்து ஹசரங்கவும் 18 லூத்தோ சிபாம்லாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் கசூன் ராஜித மற்றும் தசூன் சானக்க ஆகியோர் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடி வர இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை (85 ஓவர்கள்) இழந்து 340 ஓட்டங்களை குவித்தது. ராஜித 7 ஓட்டங்களுடனும், சானக்க 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.