தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா விருந்துபசாரம் நடத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்னதாக முக்கிய பிரமுகர்களை அழைத்து இந்த விருந்துபசாரத்தை வழங்கியுள்ளதாக புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
மாலக சில்வா ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்துபசாரம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தற்பொழுது விபரங்களை திரட்டி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றின் முக்கியஸ்தர்கள் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாயந்த திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க, நவீன் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருக்கும் புகைப்படங்கள், மாலக சில்வாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்த பிரமுகர்கள் மது அருந்தியும், புகைப் பிடித்தும் பாடல்களை பாடியும் இருந்த காட்சிகள் காணொளியாகவும் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான விருந்துபசாரங்களை நடாத்துவது நாட்டின் கொவிட் தொற்று நிலைமைகளினால் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு புறம்பானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாலக சில்வா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி இவ்வாறு விருந்துபசாரம் நடாத்தினாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.