அமெரிக்காவின் மிக மோசமான கொலைகாரன் என அதிகாரிகளால் அறியப்பட்ட நபர் சிறையில் மரணமடைந்துள்ளார்.
தமது வாழ்நாளில் 93 கொலைகளை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த 80 வயதான சாமுவேல் லிட்டில் என்பவரே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பகல் மரணமடைந்துள்ளார்.
குறித்த தகவலை கலிபோர்னியா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மேற்கு கடற்கரை மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தடுப்பு மையத்தில் பரோல் இல்லாமல் மூன்று ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார் லிட்டில்.
எஃப்பிஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2012-ல் சாமுவேல் லிட்டில் ஒரு போதை மருந்து வழக்கிலேயே கைதாகியுள்ளார்.
தொடர்ந்து அவர் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட, அவருக்கு மூன்று கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் சாமுவேல் லிட்டிலின் பங்கு நிரூபணமானதை அடுத்து 2014-ல் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2013 இல், லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்த தீவிர விசாரணையில் சாமுவேலின் மேலும் பல கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.
அமெரிக்காவின் 19 மாகாணங்களில் 1970 முதல் 2005 வரை சாமுவேல் லிட்டில் மொத்தம் 93 கொலைகளை செய்துள்ளார் என்ற தகவல் அவரே ஒப்புக்கொண்டதாக முக்கிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டது.
சாமுவேல் லிட்டிலால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.