வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை தொடர்பில் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.