ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு நடிகையை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு, தோழி மூலமாக கீழ்கட்டளையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலமாக மாறியது.
இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயார்த்தம் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. பத்திரிகைகள் அடித்து உறவினர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதன்பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதும், பொது இடங்களுக்கு ஜோடியாக செல்வதுமாக இருந்தனர். அப்போது நட்சத்திர விடுதியில் நடந்த விருந்துக்கு நடிகையை அழைத்துச்சென்ற ராஜேஷ், நாம்தான் திருமணம் செய்து கொள்ளபோகிறோமே என ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு ராஜேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதுபற்றி நடிகை கேட்டபோது, உன்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லை. உன்னிடம் உல்லாசமாக இருக்கவே காதல், திருமணம் என நாடகம் ஆடினேன். நாம் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு உனது சினிமா வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் நடிகை அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.10 லட்சம் தரவேண்டும் எனவும் மிரட்டினார். அதற்கு பயந்து நடிகை ரூ.2.50 லட்சம் கொடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்தால் உன் மீது திராவகம் வீசியும், லாரியை ஏற்றியும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் நிலையத்தில் நடிகை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சென்னை ஐகோர்ட்டில் நடிகை வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததாக ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.