ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஓரணியில் தமது நிலைப்பாட்டை சமர்ப்பிக்கும் திட்டம் அனேகமாக சாத்தியப்படாது என அறிகிறது.
நேற்று முன்தினம் (3) வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தினார்கள். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், 3 கட்சிகளின் பிரதிநிதிகளும் கொழும்பில் 6ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தனர். இதன்போது வரைவு இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்கள்.
எனினும், நாளை கொழும்பில் நடைபெறும் சந்திப்பில் இணக்கப்பாடு ஒன்றை எட்ட வாய்ப்பில்லையென்றே அறிகிறது.
காரணம், நேற்று முன்தினம் வவுனியாவில் நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் எவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த போதும், சந்திப்பு சுமகமாக நடக்கவில்லை, இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லையென்பதை நம்பகரமாக அறிந்தது.
இந்த கூட்டத்தை தமிழ் மக்கள் வாழ்வுரிமை கழகத்தின் வி.சிவகரன் ஒழுங்கமைத்திருந்தார். வவுனியா கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சிவகரன்- கஜேந்திரகுமார் இடையே மோதல் வெடித்து, சிவகரன் கலந்துரையாடலை தலைமைதாங்க முடியாத நிலைமையேற்பட்டது.
பின்னர் கஜேந்திரகுமார் தரப்பு பாதிரியார் ஒருவர் தலைமையில் கூட்டம் நடந்தது.
சர்வதேச விசாரணை நீதாயம் ஒன்றை நிறுவுவது, சர்வஜன வாக்கெடுப்பு கோரிக்கையை விக்னேஸ்வரன் தரப்பு முன்வைத்தது. சர்வதேச நீதிமன்றத்தை கஜேந்திரகுமார் தரப்பு முன்வைத்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி தரப்பில் எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்த போதும், தமது தரப்பு நிலைப்பாட்டை அவர்கள் முன்வைக்கவில்லை. அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி இரண்டு கட்சிகளும் கோரிய போதும், அவர்கள் முன்வைக்கவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற- கஜேந்திரகுமார் தரப்பு கோரிக்கையை ஆதரிக்க தயார் என்று மட்டும் குறிப்பிட்டனர்.
இந்த நிலைப்பாடுகளையொட்டி வாதப்பிரதிவாதங்கள், தர்க்கங்கள் நடந்தன.
மனித உரிமைகள் பேரவையில் தமிழர்தரப்பில் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையென எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஒரு வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைபுடன் விக்னேஸ்வரன் இணக்கியுள்ளார். அந்த வரைபை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மின்னஞ்சல் வழியாக அவர் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி இரவு கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுகாஷ் ஆகியோருக்கான தனித்தனி வரைபை முன்னணி பிரமுகர்களிடமும் சமர்ப்பித்திருந்தார். வவுனியா கூட்டத்தின்போது, “நேற்றுத்தான் அதை என்னிடம் தந்தார்கள். நான் இன்னும் படிக்கவில்லை“ என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
தமது நிலைப்பாடுகளில் இருந்து இறங்க கஜேந்திரகுமார் தரப்பு, சிவாஜிலிங்கம் தரப்பு மறுத்து விட்டன.
இணக்கப்பாடு இல்லாமலே கூட்டம் முடிந்தது.
கொழும்பில் நாளை (6) நடக்கும் கூட்டத்தில் 3 கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர, சில மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு அழைத்துள்ளது. நிமல்ஹா பெர்ணான்டோ, பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
எனினும், இதில் இணக்கப்பாடு எட்டப்பட வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்படுகிறது.