கண்டி, ஹந்தான விடுதி ஒன்றில் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விடுதியின் குளியலறையினுள் நபர் ஒருவரின் சடலம் இருப்பதாக அதன் முகாமையாளரினால் கண்டி பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை பொலிஸார் பரிசோதித்த போது உயிரிழந்த நபரின் உடலுக்கு அருகில் இரத்த கறை காணப்பட்டுள்ளதுடன, குளியலறை ஜன்னலில் துணி துண்டு ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி குறித்த விடுதியில் தங்குவதற்கு உயிரிழந்த நபரும் மேலும் சிலரும் வந்துள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் அடங்கும். விடுதிக்கு வந்தவர்கள் இரண்டு அறைகளில் தங்கிய நிலையில், கடந்த 2ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அதன் பின்னர் பணியாளர் ஒருவர் அந்த அறையின் குளியறையை சுத்தம் செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் சடலம் ஒன்றை அவதானித்து அதனை முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன், திக்கோய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய கனகரத்னம் மணிமன்னன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபருடன் வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.