பிரித்தானியாவில் பரவும் உருமாறிய வீரியம் மிக்க கொரோனா தொற்றால், இன்று நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கை அறிவித்துள்ளார் பிரதமர் ஜோன்சன்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய ஊரடங்கானது, எதிர்வரும் பிப்ரவரி மாதம் பகுதி வரை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.
புதிய வீரியம் மிக்க கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பிரித்தானியாவில் இன்று நள்ளிரவு முதல் அனைத்து பாடசாலைகளும் அத்தியாவசிய தேவையற்ற கடைகளும் அடுத்த 6 வார காலத்திற்கு மூடப்படும்.
பிரித்தானிய மக்களை பத்திரமாக தங்கள் குடியிருப்பிலேயே இருக்க வலியுறுத்தியுள்ள பிரதமர் ஜோன்சன்,
நாட்டில் அமுலுக்கு வரும் இந்த மூன்றாவது ஊரடங்கானது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அடுத்த 6 வார காலத்திற்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே அனுமதிக்கப்படுவார்கள்.
மொத்த பாடசாலைகளும் மூடப்படும். ஆனால் சிறார் பாடசாலைகள் மற்றும் சிறப்பு பாடசாலைகள் வழக்கம் போல செயல்படும்.
விவாகரத்து பெற்று பிரிந்திருக்கும் பெற்றோர்களை சிறார்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த 6 வார காலத்திற்கு மதுபானம் வெளியே வாங்கிச் செல்ல அனுமதி இல்லை.
மாணவர்கள் இந்த 6 வார காலம் பல்கலைக்கழகத்திற்கு திரும்ப தேவை இல்லை. பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியூர் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பாடசாலைகளில் வழங்கப்படும் கட்டணம் இல்லாத உணவு மாணவர்களுக்கு வழக்கம் போல வழங்கப்படும்.
விதிகளை மீறும் பொதுமக்களுக்கு 200 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும். வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கூட்டத்தை கூட்டும் நிறுவனம் அல்லது அமைப்புக்கு 10,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.