பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளதாக தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்வி அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் முன்னர் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அறிக்கை ஒன்றை கோருவார். சட்டமா அதிபரிடம் கருத்துக்களை கேட்டறிவார்.
அதன்பின்னர் குற்றப்பத்திரிகை தொடர்பில் வாதாடிய சட்டத்தரணிகளிடம் கருத்துக்களை கேட்பார். இந்த அறிக்கைகளை ஜனாதிபதி நீதியமைச்சருக்கு வழங்க வேண்டும். இந்த அறிக்கைகளை ஆராந்த பின்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை.
ஜனாதிபதி தனியாக தீர்மானிக்க முடியாது. இது சம்பந்தமாக தீர்மானிக்க மூன்று தரப்பினர் உள்ளனர். நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் அகியோரே அந்த மூன்று தரப்பினர்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் எப்படி சட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டன. நீதிமன்றத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா, நீதிபதிகள் எப்படி வழக்கை விசாரித்தனர்.அரசியல்வாதிகள் நேரடியாக தலையிட்டனரா என்பன தொடர்பான சாட்சியங்கள் இருந்தால் அனைத்தும் அறிக்கையில் வெளியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.