ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள ஆவணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே பிளவான நிலைமை காணப்படுகிறது. 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஆவணமொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புதிய ஆவணமொன்றை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், முன்னைய ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை அதிலிருந்து விலகும்படியும், தீவிர நிலைப்பாடுடைய தமிழ் தரப்புக்களுடன் இணைந்த செயற்பட்டால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கும் கடிதமொன்றையும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும், எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ளத நம்பகரமாக அறிந்தது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டுமென, தமிழ் அமைப்புக்கள் பிரிந்து நின்று முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதுவரை ஐ.தே.க ஆதரவு அமைப்பான உலகத்தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புக்களினாலேயே இந்த விவகாரம் கையாளப்பட்டது. எம்.ஏ.சுமந்திரனுடன் அந்த அமைப்புக்கள் நெருங்கிச் செயற்பட்டது அதற்கு வாய்ப்பாக இருந்தது.
தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் மேலும் இரண்டு நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளன. இதனால் உலகத் தமிழர் பெரவை போன்ற அமைப்புக்களின் பிடி தளர்ந்து விட்டது.
தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையினால் வரைபொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கனடிய, அமெரிக்கவாலிலுள்ள தமிழர் அமைப்புக்களும் அதில் இணைந்திருந்தன.
இந்த வரைபை ஏற்றுக்கொள்வதாக மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், த.கலையரசன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் தவிர்ந்த மற்றைய அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர்.
வவுனியாவில் 3 கட்சிகளிற்கிடையிலான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்னொரு வரைபை தயாரிக்க எம்.ஏ.சுமந்திரன் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதேவேளை, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், தீவிர நிலைப்பாடுடைய தமிழ் அரசியல் தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவது சட்டரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார் என்பதை நம்பகரமாக அறிந்தது. அத்துடன், அந்த கடிதத்தின் பிரதிகள், கையெழுத்திட்ட எம்.பிக்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


















