தோட்டத் தொழிலாளர்களின் 1000.00 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபாவை விட்டுக் கொடுக்க கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த தோட்ட தொழிலார்களின் 1000.00 ரூபா கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா தபாற்கந்தோருக்கு முன்னால் இன்று (10) நடைபெற்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமைதாங்கியதுடன் இந்த போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ் பிரதேச சபை உறுப்பினர்களான டி.ஜனார்தனன் ஹரிச்சந்திரன் பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மனி சிவநேசன் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்-
அரசாங்கம் ஏனைய தொழிற்சங்கங்கள் அரசாங்க அதிகாரிகள் அனைவருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் பாராளுமன்றத்தில் பிரதமரால் முன்மொழியப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் 1000.00 ரூபா அடிப்படை சம்பளத்தை மாத்திரம் தோட்ட கம்பனிகள் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயமானது.?
தோட்ட கம்பனிகள் அவர்களுடைய மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைவருக்கும் சம்பள அதிகரிப்பையும் ஏனைய கொடுப்பனவுகளையும் தங்கு தடையின்றி வழங்குகின்றது.ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றது. இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
தோட்ட தொழிலார்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் போராட்டம் செய்தே சம்பள உயர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமையே காணப்படுகின்றது.ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களுடைய கடமையை சரியாக செய்வதன் காரணமாகவே இன்று அரசாங்கத்திற்கு அந்நிய செலவானியை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலைமை இருக்கின்றது.ஆனால் அவர்களுடைய எந்த ஒரு கோரிக்கையையும் தோட்ட கம்பனிகள் கவனத்தில் கொள்வதில்லை.
இந்த முறை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000.00 வழங்க முடியாவிட்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு தோட்டங்களை ஒப்படைக்க வேண்டும்.கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபா அடிப்படைய சம்பளம் என்ற விடயத்தில் இருந்து பின்வாங்க கூடாது.நாங்களும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வெளியேறுமாக இருந்தால் மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியும்.எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பு கூறும் விடயத்தில் இருந்து பின்வாங்ங முடியாது. 1000.00 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.