சீனாவுடன் மற்றுமொரு உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய வழியில் தேயிலை விற்பனை செய்வது தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் புஜியன் ஸ்டார் சீன இன்டர்நெசனல் வர்த்தக நிறுவனத்துடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தூய இலங்கைத் தேயிலையை ஒன்லைன் முறையிலும் நேரடியாகவும் சீனா முழுவதிலும் சந்தைப்படுத்துவதற்கு இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கை தேயிலை சபைக்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
முன்னதாக கைத்தொழில், தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி போன்ற பல்வேறு விடயங்களில் சீனாவுடன் இலங்கை உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.