ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே, அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக பிரியாவிடை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து, ஜனாதிபதி டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
இந்த விழாவில் பொதுவாக முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இன்னாள் ஜனாதிபதியும் குடும்பத்துடன் கலந்து கொள்வது மரபு.
மட்டுமின்றி ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளைமாளிகையில் புதிய ஜனாதிபதிக்கு தேநீர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதும் இதுவரையான வழக்கம்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் பரிதாபமாக தோல்வியை தழுவிய டொனால்டு டிரம்ப்,
பதவியேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், அன்றைய தினமே புளோரிடா மாகாணத்தில் உள்ள தமது பண்ணை வீட்டிற்கு செல்ல உள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி டிரம்ப் தமக்குத் தாமே பிரியாவிடை நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகிய்யுள்ளது.
அதில் 21 துப்பாக்கி குண்டு முழங்க அதிகாரிகள் அணிவகுப்பும், சிவப்பு கம்பள வரவேற்பு உள்ளிட்ட ஆடம்பர விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நாளில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்ய டொனால்டு டிரம்பிடம் அதிகாரிகள் பலமுறை எடுத்துரைத்தும் இதுவரை அதற்கான உத்தரவை அவர் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் தமக்கு நெருக்கமானவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், அரிதிலும் அரிதான நிகழ்வாக, தமக்குத் தாமே பொது மன்னிப்பு வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகப்பூர்வ விமானத்தை டிரம்ப் பயன்படுத்த வேண்டும் எனில் முறையான அனுமதி பெற வேண்டும்.
ஆனால் தற்போது, டொனால்டு டிரம்ப் அவ்வாறான சூழலை எதிர்கொள்ளாமல் இருக்க சில மணி நேரங்களுக்கு முன்னரே வாஷிங்டனில் இருந்து புளோரிடா புறப்பட்டு செல்கிறார் டொனால்டு டிரம்ப்.